வவுனியா குடிமக்கள் பேரவை உதயம்

வவுனியாவில் “வவுனியா குடிமக்கள் பேரவை” எனும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணப்படும் மக்கள் பிரச்சினைகளை இனம் காணவும், அதனை உரிய இடங்களுக்கு தெரியப்படுத்தி உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் சார்பற்ற கிராமிய மக்கள் பிரதிநிதிகள் என பலரும் அரசியல் பேதங்களின்றி இணைந்து செயற்படும் முகமாக இந்த வவுனியா குடிமக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிய குழுவாக ஆரம்பித்துள்ள இந்த அமைப்பு வவுனியா நகரத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த அமைப்பு செட்டிகுளம், நெடுங்கேணி உட்பட சகல பகுதிகளுக்கும் விரிபுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் இன மத பேதமின்றி இந்த அமைப்பு தனது செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளது.

வவுனியாவில் பல அமைப்புகள் உருவாக்கப்படுவதும், அது சிறிய காலத்தில் காணாமல் போவதும் சகஜமான விடயமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக அழுத்தம் வழங்கும் சமூக அமைப்புகளை இங்கு யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது. மாறாக தட்டிக் கேட்கவேண்டிய வியடங்களுக்கு ஆதரவாக செயற்படும் அமைப்புகளும், பாரா முகமாக இருக்கும் அமைப்புகளுமே இன்று காணப்படுகின்றன.

வவுனியாவில் அடையாளப்படுத்தப்படவேண்டிய பல விடயங்கள் காணப்படுகின்றன. சாதரண விடயங்கள் முதல் உயர் அரச செயற்பாடுகள் வரை பல சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன. சரியாக செல்கின்ற விடயங்கள் சரியாகவே செல்லட்டும். மாறாக சில விடயங்கள் இங்கே கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டிய நிலை காணப்படுகிறது. சில விடயங்கள் ஆலோசனைக்கு உட்படுத்தபபடவேண்டியவையாக காணப்படுகின்றன. இயங்கும் பொறி முறைக்குள் நிர்வாகத்துக்குள் மக்கள் சார்பாகவும், சமூகம் சார்பாகவும் உள்ளீடுகளை சமூக அமைப்புகளே உட்செலுத்த வேண்டும். அதனை முன்னெடுக்கவே நாம் முயற்சி செய்யப்போகிறோம்.

மேலும் பல விடயங்களும் செயற்பாடுகளும் உதவிகள் மூலம் தீர்க்கப்படவேண்டியவை. கல்வி செயற்பாடுகளுக்கு மேலும் பல உதவிகள் இங்கு தேவைப்படுகின்றன. இளைஞர்களது நாட்டம் விளையாட்டில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. போதைக்கு அடிமையாகும் காலமாக இது காணப்படுகிறது. இவற்றை மாற்ற சமூக மேம்பாட்டுக்கு பல உதவிகளும் தேவைப்படுகின்றன. அவற்றை இந்த குழு பரிந்துரை செய்து உரியவர்கள் மூலமாக உரிய வேலைத்திட்டங்களை செய்ய முயற்சிக்கவுள்ளது.

இங்கு சுட்டிக்காட்டத் தக்கவேண்டிய மேலும் பல விடையங்கள் காணப்படுகின்றன. ஒரே மூச்சில் எல்லாவற்றையும் மாற்றி விட முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் ஒவ்வொன்றாக ஆரம்பித்து சரியான ரீதியில் கொண்டு சென்றால் ஒரு புள்ளி ஒரே பெரிய கோடாக மாறலாம். எல்லாவற்றுக்கும் அந்த ஆரம்ப புள்ளியே முக்கியமானது. அந்த ஆரம்ப புள்ளியினை சிலர் இணைந்து ஆரம்பித்துள்ளோம். விரவில் மேலும் பலர் உள் வாங்கப்பட்டு படிப்பபடியாக விரிவு படுத்தவுள்ளோம். இந்த அமைப்போடு ஆர்வம் உள்ள அனைவரும் இணைந்து செயற்படமுடியுமென அழைக்கிறோம் எனவும் வவுனியா குடிமக்கள் பேரவை அனைவருக்குமான அழைப்பை விடுத்துள்ளது.

வவுனியா குடிமக்கள் பேரவை உதயம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version