அழைப்பு மைய (Call center) மோசடிகள் மற்றும் கிரிப்டோ நாணய மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தாய்லாந்தில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையின் (IT) பணி வெற்றிடங்களுக்கு இலங்கைப் பிரஜைகள் ஈர்க்கப்படுவதை தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் சமீபத்தில் அவதானித்துள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்தில் இருந்து பெரும்பாலும் மியான்மருக்கு எல்லை வழியாக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் பணிபுரிய பணிக்கப்படுவதாக தெரியவந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சட்டவிரோதமாக நாடுகளுக்குள் நுழைய முற்பட்டபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களும் சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் மேலும், அதை பணி செய்வதற்கான விசாவாக மாற்றி தருவதாகவும் உறுதியளித்து ஏமாற்றப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கைப் பிரஜைகள் இதுபோன்ற மோசடியான வேலை வாய்ப்புகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும், இது போன்ற எந்தவொரு வேலை வாய்ப்பையும் எடுப்பதற்கு முன்னர் பல வழிகளில் சரிபார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தாய்லாந்து குடிவரவு பணியகத்தின் இணையதளமான www.immigration.go.th மூலம் தாய்லாந்து விசா விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.