கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 355 தொழுநோயார்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், அடையாளம்காணப்பட்ட தொழுநோயாளர்களில் சுமார் 10 வீதமானவர்கள் சிறுவர்கள் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொழுநோய் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.
சருமத்தில் ஏதேனும் ஒரு புள்ளி இருந்தால், அவர்கள் அதை அறிவித்து வைத்திய ஆலோசனை பெற முடியும் எனவும், புள்ளி இருக்கும் இடத்தை தெளிவாகப் புகைப்படம் எடுத்து, 075 408 8604 என்ற வாட்ஸ்அப் உலகத்தின் மூலம் அனுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழுநோய்க்கு பயப்பட வேண்டாம் எனவும், அதை மறைக்க வேண்டாம் எனவும், தொழுநோய்க்கு எதிராக போராட இந்த நாட்டில் உள்ள அனைவரின் ஆதரவையும் எங்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.