சீன உதவியுடன் அமைக்கப்பட்ட தேசிய வைத்தியசாலையின் கட்டடம் கையளிப்பு!

சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எட்டு மாடிகளைக் கொண்ட வெளிநோயாளர்களுக்கான கட்டடத் திட்டம் நேற்று (25.04) இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நேற்று இடம்பெற்ற வைபவமொன்றின் போது இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அவர்களினால் இந்த கட்டிடம் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டது.

சீன தூதுவர் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகிய இருவரும் இரு நாடுகளையும் பிரதிநித்துவப்படுத்தி, இந்த வருடத்தில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான ஒப்படைப்பு ஆவணங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டனர்.

80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்த திட்டம் சுமார் 50,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளதுடன், நாளாந்தம் 6,000 நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வசதிகளை கொண்டு அமைந்துள்ளது.

இந்நிகழ்வின்போது, சீனாவின் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளிநோயாளர் கட்டடமானது நாட்டின் சுகாதாரத் துறைக்கு பெரிதும் உதவும் திட்டம் என தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள மருத்துவ வல்லுநர்கள் இதனை மக்களுக்காக சிறந்த முறையில் பயன்படுத்தி கையாள்வார்கள் எனவும், மேலும் அவர்களும் இதன் மூலம் பெரும் பயனடைவார்கள் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீன ஊடகமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீன அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகக் தெரிவித்த சீனத் தூதுவர் Qi Zhenhong, COVID-19 தொற்றுநோய்களின் போது சீனா இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கி உதவியதாக தெரிவித்துள்ளதுடன், தொடர்ந்தும் இவ்வாறான ஒத்துழைப்புகள் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version