சினோபெக் செயற்பாடுகள் விரைவில்!

சீன எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக்கின் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, ஒப்பந்தங்களை உறுதி செய்து முழுமை படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (25.04) அமைச்சில் அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்தம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது, ஒப்பந்தங்கள் மே மாத நடுப்பகுதிக்குள் கைச்சாத்திடுவது தொடர்பிலும், கையொப்பமிட்ட 45 நாட்களுக்குள் செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி (CBSL), இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகியவை ஷெல் பிஎல்சி உடன் இணைந்து இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் நுழைவதாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் மற்றும் விநியோகிப்பதற்கும் 20 வருடங்கள் செல்லுபடியாகும் உரிமம் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 150 CPC எரிபொருள் நிலையங்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version