சுனாமி எச்சரிக்கை குறித்து அறிவிக்க புதிய Ringtone முறை!

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசி பயனாளர்களாக இருப்பதால், சுனாமி ஆபத்து தொடர்பில் கைத்தொலைபேசியின் ரிங்டோன் ஊடாக அவர்களுக்கு அறிவிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டமானது தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை உறங்கிக் கொண்டிருப்பதால், அந்த நேரத்தில் சுனாமி அபாயம் குறித்து தகவல் கிடைத்தால், அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் ஒலிக்கும் முறைமை தயாரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் செயலிழந்த நிலையில் காணப்பட்டால், எதிர்காலத்தில் ஆபத்தான நிலைமை ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் தலைவர் திரு அதுல சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு முதல் இலங்கையில் 48 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் (செயல்திறன்) எம்.எம்.ஜே.பி. அஜித் பிரேமா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26.04) இடம்பெற்ற நிலநடுக்க அபாயம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், 2020ல் 16 நிலநடுக்கங்களும், 2021ல் 18 நிலநடுக்கங்களும், 2022ல் 05 நிலநடுக்கங்களும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 09 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version