பொது மக்கள் COVID-19 தொடர்பான அறிகுறிகள் குறித்து தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்தியுள்ளது. எனினும் நாட்டில் மற்றொரு COVID-19 கொத்தணி உருவாகும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அதிகரிப்பு குறித்து பேசிய GMOAவின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க, இலங்கையில் காணப்பட்டதைப் போன்ற மற்றொரு COVID-19 பெருந்தொற்று ஏற்படுவதற்கான கடுமையான அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகமாக பாதிக்கப்படக்கூடிய கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், சிறுநீரகம் அல்லது இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் 90% க்கும் அதிகமானோர் COVID-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பதுடன், 60% பேர் செயலூக்கி தடுப்பூசியையும் பெற்றுகொண்டுள்ளனர், எனவே மற்றுமொரு இக்கட்டான நிலைக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், முகக்கவசங்களை அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிக முக்கியம் என்று வைத்தியர் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.