அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

01.         சுங்க நடவடிக்கைகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்புக்களுக்கான அவுஸ்திரேலிய தேச எல்லைகள் படையணி மற்றும் இலங்கை சுங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுங்கத் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்குரிய இருதரப்பினர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கைச் சுங்கத்திற்கும், அவுஸ்திரேலியா தேச எல்லைகள் படையணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இரு நாடுகளிலும் நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஒழுங்குவிதிகள், நடவடிக்கைமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கமைய, சுங்க நடவடிக்கைகளுக்குரிய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிகளை பலப்படுத்தல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தல் போன்றவையே முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும். தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02.         லக்சம்பர்க் (Luxembourg)) அரச வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகாரங்கள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

லக்சம்பர்க் அரச வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகாரங்கள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பாக அரசியல், பொருளாதார, வணிக, விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புத் தொடர்புகளை ஊக்குவித்தல், பலப்படுத்தல் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கும் லக்சம்பர்க் இடையில் இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.         2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சட்டமூலத்தை மையமாகக் கொண்டு திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.         உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்கு வேட்புமனு சமர்ப்பித்துள்ள அரசியல் உரிமைகள் கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகைகளை வழங்கல்

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக வேட்புமனு சமர்ப்பித்துள்ள அரச ஊழியர்கள் தொடர்பாக தேர்தல் நடாத்தப்படும் வரைக்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புக்களைக் கருத்திற் கொண்டு, அவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரச பகுதி அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அரச பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.         2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் 73 ஆவது ஆண்டறிக்கை 2023.04.27 ஆம் திகதி நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான கௌரவ ஜனாதிபதி அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. நிதிச் சட்டத்தின் கீழான ஏற்பாடுகளுக்கமைய ஆண்டறிக்கை கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் குறித்த அறிக்கையை நிதி விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். அதற்கமைய, 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை பாராளுமன்றுக்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.         ஆசியான் பிராந்திய ஒன்றியம் ((ASEAN Regional Forum)

ஆசியான் பிராந்திய ஒன்றியத்தின் (ARF) அங்கத்துவ நாடான இலங்கை 2022-2024 காலப்பகுதிக்கான அணுவாக்கல் பெருக்காமை மற்றும் ஆயுதக் குறைப்பு பற்றிய இடைக்கால கூட்டத்தொடரின் இணைத்தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தது. 2023 மே மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் ஆசியான் பிராந்திய ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கான 14 ஆவது இடைக்கால கூட்டத்தொடரை நடாத்துவதற்கு ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது. குறித்த இடைக்கால கூட்டத்தொடருக்கான வசதியளிப்புக்களை மேற்கொள்வதற்காக தனது அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அவர்களால் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

07.         மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்காவை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் முகாமைத்துவம் செய்தல்

மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்காவை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 2023.02.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கு அதுபற்றி விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக குறித்த முன்மொழிவை அரச – தனியார் பங்குடமையில் தேசிய முகவராண்மை நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, குறித்த முகவராண்மை நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்காவை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

08.         திறைசேரி முறிகள் வெளியிடும் அனுமதிக்கப்பட்ட எல்லையை திருத்தம் செய்தல்

2022 நவம்பர் மாதம் பாராளுமன்றத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட திறைசேரி முறிகளை வெளியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட எல்லை 5,000 பில்லியன்களாகும். 2023 மார்ச் மாதம் இறுதியாகும் போது செலுத்தப்பட வேண்டிய மொத்த திறைசேரி முறிகள் மீதி 4,636 பில்லியன் ரூபாய்களாகும். 2023 ஆம் ஆண்டுக்கான 4,979 பில்லியன் ரூபாய்கள் அண்ணளவான கடன் பெறல் எல்லைக்கான பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றில் 3,526 பில்லியன் ரூபாய்கள் உள்ளூர் மூலங்களிலிருந்தும், மற்றும் 1,453 பில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டு மூலங்களிலிருந்தும் பெற்றுக்கொள்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கடன் பெறல் பிரதானமாக திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி பிணையங்கள் வெளியிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும். அதற்கமைய, திறைசேரி முறிகளை வெளியிடுவதற்காக தற்போது நிலவுகின்ற உயர்ந்தபட்ச எல்லையை திருத்தப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, திறைசேரி முறிகளை வெளியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட எல்லையை 6,000 பில்லியன் ரூபாய்கள் வரைக்கும் அதிகரிப்பதற்கும், அதற்காக பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09.         வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்

வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்காக 2022.11.21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சடடமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply