சர்வதேச சந்தைகளில் யாழ். வாழைப்பழம் – அமைச்சர் டக்ளஸ் பாராட்டு

கிடைக்கின்ற வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள, வழைப்பழ ஏற்றுமதி தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், ஆழமான தீர்க்கதரிசனமான முயற்சிகளை முன்னெடுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் என அமைச்சரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியில் விவசாய செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய அமைக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலையில் பதனிடப்படுகின்ற கதலி வாழைப்பழங்கள் டுபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சுமார் 250 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளதுடன் கதலி வாழைப்பழத்திற்கு நியாயமான விலையையும் யாழ்ப்பாண விவசாயிகள் பெறத் தொடங்கியுள்ளனர்.

எதிர்வரும் மாதங்களில் இத்திட்டத்தின் மூலம் ஏற்றுமதியினை விஸ்தரித்து நேரடியாக பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கையை 700 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் மாதங்களில் வாரத்திற்கு 22,000 கிலோ கதலி வாழைப்பழம் யாழ்ப்பாணத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version