ஆசிய கிண்ணம் 2023 தொடரை பாகிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடாத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் திட்டத்துக்கு இலங்கை கிரிக்கெட் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆகியன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. நேற்று (09.05) டுபாயில் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்துக்கும், அங்கத்துவ நாடுகளுக்குமிடையில் நடைபெற்ற கூட்ட தொடரிலேயே இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்குக், இந்தியா அணி பயணிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியா அணி விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஏனைய போட்டிகளை பாக்கிஸ்தானில் நடத்துவது என்ற திட்டம் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. ஒரே நாட்டில் விளையாடுவதற்கு தயார் எனவும், ஆனால் செப்படம்பர் முதற் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் வெப்பம் காரணமாக விளையாடுவது கடினம் எனவும் இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் காரணமாக கடந்த வருட ஆசிய கிண்ணம் செப்டமபர் முதற் பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணம் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் நடாத்தப்பட்டது.
இலங்கை கிரிக்கெட், பாகிஸ்தான் ஏற்பாட்டில் இலங்கையில் போட்டிகளை நடாத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் போட்டிகளை தம் நாட்டிலே நடாத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தமது பயண திட்டங்கள் மற்றும் தயார்ப்படுத்தல்களில் சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன என்ற விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன.
செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி முதல் நடத்தப்படவுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்த தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொடர் முக்கியத்துவம வாய்ந்ததாக அமையவுள்ளது.