இலங்கை கிரிக்கெட்டுக்கள் அரசியில் தலையீடுகள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உபதலைவர் இம்ரான் குவாஜா இன்று(10.05) இலங்கை வருகை தந்துள்ளார். அரசியல் தலையீடுகள் உள்ளனவா என விசாரணைகளை நடாத்துவதற்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவில் இவரும் ஒரு உறுப்பினராவார்.
“உண்மையை கண்டறியும் திட்டம்” எனும் இந்த திட்டத்தில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று சபை ஆகியவர்களை இம்ரான் குவாஜா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் அரசியல் தலையீடுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் அதனால் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இம்ரான் குவாஜா இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட், விளையாட்டு அமைச்சருக்கு எழுத்து மூலமாக மே 08 ஆம் திகதி அறிவித்துள்ளதாகவும், அவர் விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க ஆர்வமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறை அமைச்சர் சார்பில் எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.