அண்மையில் இந்து, புத்த, இஸ்லாம் மதங்களை இழிவுபடுத்தி போதனைகளை மேற்கொண்ட கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்னான்டோவுக்கு எதிராக உடடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நேற்று(15.05) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு சபை கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த விசாரணை உடனடியாக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு சபையின் தலைவர் கேள்வியெழுப்பிய அதேவேளை, இந்த கருத்துக்கள் மதங்களுக்கிடையிலான முறுகல் நிலையினை தோற்றுவிக்கும் எனவும் – சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த காலங்களிலும் ஜெரோம் பெர்னாண்டோ பல சர்ச்சைகளில் அகப்பட்டிருந்தார். அவை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பாரிய மக்கள் கூட்டங்களை இவர் எவ்வாறு ஏற்பாடு செய்கிறார்? இவருக்கு எவ்வாறு பெரும் தொகையான பணம் கிடைக்கிறது? என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் மூலம் பலரும் தம் கண்டங்னகளையும், எதிர்ப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
நடைபெற்ற கூட்டத்தில் மும்மதங்களையும் கடுமையாக தாக்கியும், இழிவுபடுத்தியும் உரையாற்றிய ஜெரோம் பெர்னாண்டோ, ஏனைய மதங்களின் வழிபாட்டு முறை, நம்பிக்கை போன்றவற்றையும் இழிவுபடுத்தி கேலி செய்திருந்தார். அவரின் உரையின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பகிரப்பட்டு வருகின்றன.
நாட்டை சீரழிக்கவும், சமயங்களை இழிவுபடுத்தவும் தான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் மத ஒற்றுமையினை சீர்குலைக்க முயல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
பௌத்தர்கள் ஒரு போதும் புத்தர் போதித்த அன்பை கடைப்பிடிக்க மாட்டார்கள் எனவும், அவர்கள் ஞானத்தையே தேடுகின்றனர் எனவும் அதற்கு இயேசு கிறிஸ்துவே தேவையெனவும் குறித்த நிகழ்வில் கூறியுள்ள அவர், இந்துக்கள் ஏன் அதிகமான மிருங்ககளை வழிபடுகின்றனர்? ஏன் யானை வடிவத்தில் கடவுள் காணப்படுகிறார்? ஏன் 10,000 கரங்களுடன் கடவுள் இருகிறார்? இவை எதுவும் உண்மையில்லை என கூறியுள்ளார். அத்தோடு பசுக்களை ஏன் வணங்குகிறார்கள்? அவர்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் இன்னும் தொலைவில் உள்ளனர். யாரவது இந்து மக்களிடம் சென்று சொல்லுங்கள் அவர்கள் செய்வது அவர்களுக்கு உண்மையாக இருக்கலாம், ஆனால் அதற்குள் ஆழமான உண்மையுள்ளது எனவும் ஆராதனை நிகழ்வில் கூறியுள்ளார். அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில கூட அன்பு இல்லை எனவும் இஸ்லாம் மதம் தொடர்பில் கூறியுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் தனது சமயம் தொடர்பில் பேசியதனை விட ஏனைய சமயங்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியிருந்தனர். அதன் போது அங்கு கூடியிருந்த மக்களும் ஆரவாரம் செய்து சிரித்து மகிழ்ந்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த வீடியோ காட்சி வெளிவந்ததனை தொடர்ந்து, “சமயம் தொடர்பில் இழிவான கருத்துக்களை வெளியிட எவருக்கும் அனுமதியில்லை. அவ்வாறு செய்தால் மிக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அத்தோடு மத வழிபாடுகளுக்கு சட்ட ரீதியற்ற பல வழிப்பாட்டு தலங்கள் காணப்படுவதாகவும், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இந்த போதனையை நடாத்திய இடமும் அதில் உள்ளடக்கம் என அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.