சீனக் குடியரசின் யூனான் மாகாணக் குடியரசின் வெளிவிவகாரங்கள் அலுவலகத்திற்கும், இலங்கை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2023 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை சீனக்குடியரசின் யூனான் மாகாண ஆளுநர் வண(க்) யூகேத அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்படவுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பர சுற்றுலா, பொருளாதாரம், சந்தை மற்றும் வர்த்தகம், கல்வி, சுற்றுலாத்துறை, விவசாயம், மானுடக் கலாச்சாரப் பரிமாற்றங்கள், மக்களுடைய வாழ்க்கைத் தரம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவின் யுனான் மாகாணத்தின் சனத்தொகை 50 மில்லியன்களாவதுடன், 2022 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டமொத்தத் தேசிய உற்பத்தி 417 பில்லியன் டொலர்களாகும். அதனால், மாகாண ஆளுநரின் இலங்கைக்கான விஜயத்தின் ஊடாக எமது நாட்டுக்குப் பல நன்மைகள் கிட்டும்.
இவ்விஜயத்தின் போது ஆளுநர் அவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களைச் சந்திக்க இருப்பதுடன், கொழும்பு துறைமுகத்தையும் பார்வையிடவுள்ளார். மேலும் ஆளுநர் அவர்கள் கண்டி, பொலன்னறுவை மற்றும் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்யதிட்டமிட்டுள்ளதுடன், திருகோணமலை மாவட்ட மாணவர்கள் மற்றும் வறுமைப்பட்ட மக்களுக்கு 25 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பாடசாலை பைகள் மற்றும் உணவுப் பொதிகளை நன்கொடையாக வழங்கவுள்ளார்.
சீனாவின் யுனான் மாகாணத்தின் வெளிவிவகார அலுவல்கள், கல்வி, வணிகம் மற்றும் விவசாயப் பணிப்பாளர்கள் பிரதிநிதிகள் குழுவில் அடங்குவதுடன், குறித்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
யுனான் மாகாணம் இலங்கையுடன் வணிகம், புத்த சமயம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை கொண்டுள்ளதுடன், 600 வருடங்களுக்கு முன்னர் சீனாவின் அட்மிரல் ஸென்ஹே அவர்கள் இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகங்களுக்கு பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இலங்கை மக்கள் கடந்த வருடம் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தபோது யுனான் மாகாண அரசு கிழக்கு மாகாணத்தில் 10,000 இற்கு மேற்பட்ட நலிவுற்ற மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தது.