வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் விஷேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டது.
இன்று (16.05) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
வவுனியா பறயனாலங்குளம் விஷேடஅதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு, பகுதியில் சோதனையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினர் வாகனம் ஒன்றை வழி மறித்தனர். இதன்போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றுள்ளது.
இதனையடுத்து வாகனத்தின் முன் சக்கரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வாகனத்தில் இருந்த சந்தேக நபர் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த வாகனத்தில் இருந்து 7 முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டதுடன் அவை ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தின் போது விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் சிறு காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வெளியேறியதாக விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்