வவுனியாவில் அஞ்சலி!

யுத்தத்தால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி சமாதான புறாக்களும் பறக்க விடப்பட்டன.

பயங்கரவாத யுத்தத்தால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி என தெரிவித்து நிகழ்வு ஒன்று இடம்பெற்றதுடன், சமாதான புறாக்களும் பறக்க விடப்பட்டன.

வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று (18.05) மாலை 5.30 மணிக்கு வன்னி மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டு கொடிய யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். கொடிய யுத்தத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பலர் இறந்துள்ளார்கள்.

அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி பௌத்த பிக்குகளும், இந்து மதகுருமார், கத்தோலிக்க மதகுரு, இஸ்லாமிய மதகுரு ஆகியோரின் ஆசிகளுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிரதான சுடரினை மதத் தலைவர்களும் அதிதிகளும் ஒன்றிணைந்து ஏற்றி வைக்க, ஏனைய சுடர்களை பொதுமக்கள் ஏற்றி வைத்தனர்.

இறந்தவர்கள் நினைவாக தென்னம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் என்.கருணாநிதி, சிவசேனை அமைப்பினர், வர்த்தக சங்க தலைவர், முச்சக்கரவண்டி சங்க தலைவர், வவுனியா கந்தசாமி கோவில் நிர்வாகத்தின், ஐக்கிய தேசியக் கட்சியினர், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கட்சி, இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதற்கான அழைப்பிதழ்கள் இராணுவ புலனாய்வாளர்களால் முக்கிய பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் ஏனையோருக்கு வன்னி மக்கள் ஒன்றியத்தால் வழங்கப்பட்டிருந்த இந் நிகழ்வில் அதிகளவிலான சிங்கள மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் அஞ்சலி!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version