மறைந்த தொழிலதிபர் டினேஷ் சாப்டரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்வதன் மூலமே அவரின் இறப்புக்கான காரணத்தை அறிய முடியுமெனவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் 5 பேரடங்கிய மருத்துவ குழு நேற்று(18.05) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.
டினேஷ் சாப்டரின் மர்மான இறப்பு தொடர்பில் சந்தேகம் நிலவி வரும் நிலையில் மருத்துவ அறிக்கையில் குழப்பமான நிலை ஏற்பட்டதனை தொடர்ந்து மருத்துவ குழு ஒன்றை அமைத்து இறப்புக்கான சரியான காரணத்தை நீதிமன்றத்துக்கு வழங்குமாறு நீதிமன்றம் தேசிய வைத்திய சாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
குறித்த குழுவே தற்போது நீதிமன்றத்திடம் உடலை தோண்டி எடுக்க அனுமதி கோரியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் டினேஷ் சாப்டர் குற்றுயிருடன் பொரளை மயானத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார். இவரின் இறப்புக்கான காரணம் முதலில் மூச்சு திணறல் மூலம் ஏற்பட்ட மாரடைப்பு என கூறப்பட்டது. பின்னர் சயனைட் அருந்தியதன் காரணமாக இறந்துள்ளார் என கூறப்பட்டது. இவ்வாறு மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யபப்ட்டாரா என மர்மம் தொடர்கிறது.