குரங்கு ஏற்றுமதி தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த கால அவகாசம் வேண்டும்!

இலங்கையில் உள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 26ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு குழுவுக்கு முன்னிலையில் நேற்று (19.05) அந்த மனு தொடர்பில் பேசப்பட்ட போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், வணக்கத்துக்குரிய மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன மற்றும் ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பேர் ஒன்றிணைந்து இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version