மருந்துத் தட்டுப்பாட்டு விடயத்தில் அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்?

நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக இலங்கையின் முன்னணி மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

(SLMA) “அரசு மருத்துவமனைகளில் சில மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நோயாளர்களுக்கான மாதாந்த கிளினிக்குகளில், வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வைத்தியர்கள் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள். அநேகமான நோயாளர்கள் வெளியில் அதை கொள்வனவு செய்ய மாட்டார்கள். தனியார் மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளின் அதிகப்படியான விலை காரணமாக பலருக்கு அதனை கொள்வனவு செய்துகொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பற்றாக்குறை நிலவுகிறது எனினும் அரசாங்கம் இந்த விடயத்தின் தீவிரத்தன்மையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை என வைத்தியர் ஆரியரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

நன்கொடையாளர்கள் அரசாங்கத்திற்கு மருந்துகளை வழங்கும் செயல்முறையும் பல தடைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வலிநிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதயநோயாளிகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக பொருட்களுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நிலவும் மருந்துப் பற்றாக்குறை சுகாதாரத் துறையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால், உடனடியாக அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நிதிப்பற்றாக்குறை, கொள்முதல் முறையில் உள்ள சிக்கல், தெளிவின்மை, விநியோகஸ்தர்களின் ஏகபோகம் உள்ளிட்ட பல காரணங்களால் குறித்த மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை இனக்கான முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவமனைகளில் மொத்தம் 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, எனினும் தற்போது நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவமனைகளில் கடந்த 2022 முதல் மருந்து பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்பதை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்பது தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version