குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோவினால் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று (26.05) அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏனைய மதங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் கடந்த வாரம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்கு தொடர்ந்து கோட்டை நீதவான் நீதிமன்றில் பயணத் தடையைப் பெற்றனர்.
எனினும், கடந்த 14ம் திகதி போதகர் ஜெரோம் நாட்டை விட்டு வெளியேறியிருப்பது தெரியவந்தது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, பௌத்த, இஸ்லாம் மற்றும் இந்து மதம் தொடர்பாக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தபட்டதையடுத்து குறித்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அவரது கருத்துகளின் வீடியோ காட்சிகள் நாட்டில் உள்ள பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சையை அடுத்து, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். எனினும் தற்போது (CID) தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்துள்ளமை இந்த சர்ச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.