பாக்கு மோசடி குறித்து உண்மைகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்!

பாக்கு உற்பத்திச் செய்கை இந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வருமானம் தரும் ஒரு உற்பத்தியாகும் எனவும்,ஆண்டுக்கு 20000 மெட்ரிக் டொன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் சுமார் 4000 மெற்றிக் டொன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்திய இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் 4000 பொருட்களை இந்திய சந்தைக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,இதற்கான உத்தியோகபூர்வ உரிம பத்திரம் வழங்கப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளில் இருந்து பாக்கு இறக்குமதி செய்யப்பட்டு எத்தகைய பெறுமதி சேர் வரியும் அறவிடப்படாமல் மீள் ஏற்றுமதி செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த (26.05) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனால்,தேசிய உற்பத்தியாளர்களுக்கு கடும் அநீதி இழைக்கப்படுவதனால் இதில் கவனம் செலுத்துமாறும், இவ்வாறு தரமில்லாமல் ஏற்றுமதி செய்வதால் நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் கருப்புப் பட்டியலில் இடம் பெறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மீள் ஏற்றுமதிக்காக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாக்குகள் குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும்,சட்ட ரீதியாக இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், துறைமுகத்தில் 39 கொல்கலன்கள் இவ்வாறு மீள் ஏற்றுமதிக்கு தயார் படுத்தப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தமக்கு கிடைக்கபெற்றுள்ளதாகவும், இது குறித்த ஆதாரங்கள் தம் வசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எத்தகைய பெறுமதி சேர் வரியும் அறவிடப்படாமல் நமது நாடு தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அமைச்சரவை இதற்கு என்ன பதிலைக் கூறப்போகிறது என்பதை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சும் உரிய தரப்புகளும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், இவ்வாறு சட்ட விரோத இறக்குமதியை மேற்கொண்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும்,உரிய விசாரணை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version