ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை திருத்தம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று (28.05) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டொலர் பிரச்சனை மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் வகையில், பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
எனினும், விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளின் கோரிக்கைகளின்படி, சில கட்டுப்பாடுகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், மத்திய வங்கியின் கொள்கை வகுப்பாளர்களின் கூற்றுப்படி, வெளிநாட்டு கையிருப்பு பாதிக்கப்படாத வகையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.