கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை கிளிநொச்சி மாவட்டத்தினுள் கொண்டு செல்லத் தடை செய்யப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(01.06) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே, குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
வெளி மாகாணங்களை சேர்ந்த அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி, கிளிநொச்சி மாவட்டத்தில் அகழப்படுகின்ற சட்டவிரோத மணல், பிரதான வீதியினால் எடுத்துச் செல்லப்படுவதனால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், துறைசார் அமைச்சர், துறைசார் திணைக்கள தலைவர் ஆகியோருடன் தொடர்புக்கொண்டு கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளி மாகாணங்களில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு மணல் எடுத்து வருவதை தடுப்பதாக அறிவித்துள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக 2017, 2018 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் செயற்பட்ட காலத்தில் கௌதாரிமுனை பிரதேசத்தில் பாரிய மணல் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய காலப் பகுதியில் அவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், கௌதாரிமுனையில் அமைக்கப்படவுள்ள காற்றாலை திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டதுடன், கௌதாரி முனை காற்றலை திட்டத்தின் ஊடாக பிரதேச மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மை தொடர்பாக ஆராய்ந்து ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொன்னாவெளி சீமேந்து தொழிற்சாலை தொடர்பான மண் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அனுமதியும் இன்று ஒருங்கிணைப்புக் குழுவினால் வழங்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழில், சுகாதாரம், கல்வி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.