இலங்கை பொலிஸ்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட்களாக பணியாற்றும் கிட்டத்தட்ட 300 பேர் பணிபுரியும் போதே சொந்தப் பணத்தில் பட்டப்படிப்பை முடித்தாலும், அவர்களின் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்குவதற்கான முறையான திட்டம் இன்னும் நடைமுறையில் இல்லை எனவும்,இது அவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06.06) பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதுபோன்ற பதவிக்கு செல்வதற்குத் தேவையான ஏதாவது முறையான கட்டமைப்பொன்றை தயார் செய்யுமாறு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்,பாதுகாப்பு உதவியாளர்கள் கான்ஸ்டபிள் பதவிக்கு பின்னர் நியமிக்கப்பட்டது போல்,ஏதேனும் ஒரு சிறப்பு கருதி,இந்த தரப்பினருக்கும் உயர் பதவி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.