உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை வருடம் தோறும் நடாத்தும் உலக தொடர் 2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் ஸ்தாபக தலைவர் கந்தையா சிங்கம் இலங்கைக்கு வருகை தந்து இந்த போட்டி தொடருக்கான முதற் கூட்டத்தில் கடந்த 02 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்டார். அத்தோடு இந்த தொடரை நடாத்துவதற்கான இணைப்புக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
நடைபெறவுள்ள இந்த தொடர் யாழ்ப்பாணத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி ஆரம்பித்து ஒரு வாரத்துக்கு நடைபெறவுள்ளது. இந்த தொடர் நடாத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள யாழ் பூப்பந்தாட்ட அரங்கத்தை உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை குழுவினர் பார்வையிட்ட அதேவேளை யாழ் துணை வேந்தர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜாவையும் சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி சபாநாதன் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான பிரதம ஒருங்கிணைப்பாளராக ஏகமானதாகச் தெரிவு செய்யப்பட்டார். குறித்த குழுவின் வழிகாட்டியாக உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை ஸ்தாபக தலைவர் கந்தையா சிங்கம் செயற்படவுள்ளார். இந்த தொடருக்கான உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை இணைப்பாளராக வாஹீஷன் மகேன் நியமிக்கப்பட்டார். வட மாகாண பூப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் தவராஜா கமலன் அடங்கலாக பிரின்ஸ்லி லம்பெர்ட், தங்கவேல் நிலோஜன்,
சந்திரசேகரன் விமலச்சந்திரன், கஷாலி மொஹமட், ஜெரமி ஜேசுரா, சஹானா சர்வேஸ்வரராஜா, சிவகெளரி சசிகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவின் ஆலோசகர்களாக கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன், வைத்திய கலாநிதி அறிவுச்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பாடுகள் தொடர்பில் முழுமையாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் பணிகள் யாவும் சகலருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை ஸ்தாபக தலைவர் கந்தையா சிங்கம் தெரிவித்துள்ள அதேவேளை விரைவில் இந்த தொடர் தொடர்பில் அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.