களுவாஞ்சிகுடி களுதாவலி பகுதியில் விஷ மீன்களை உண்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது தாயும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
நேற்று (08.06) களுதாவலி கடற்கரையில் மீனவர்களால் பிடிக்கப்பட்ட ஒரு வகை மீன்களை உயிரிழந்த யுவதியின் தாயார் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். குறித்த மீனில் விஷம் உள்ளதால் அதனை உண்ண வேண்டாம் என மீனவர்கள் எச்சரித்த போதிலும் அதனை பொருட்படுத்தாது, சமைத்து தனது மகளுடன் சேர்ந்து உண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகவீனமடைந்த இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 27 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.