அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில் 10 பேர் இறந்துள்ளதோடு இருபது பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் காணப்படுவதாக சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகம் பேர் இறந்த அவுஸ்திரேலியா வீதி விபத்து இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவத்துக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களை ஏற்றி சென்ற வெள்ளை நிற பேரூந்து பிரதான வீதியோடு இணையும் வளைவில் உள்ள வீதி தடுப்புகளோடு மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு அவுஸ்திரேலியா பிரதமர் அந்தனி அல்பன்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமண வைபவம் மற்றும் கொண்டாட்டங்கள் நிறைவடைந்து நள்ளிரவு தாண்டி குறித்த குழுவினர் பயணித்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்கள் திருமண நிகழ்வில் எடுத்த புகைப்படங்கள் முகப்புத்தகத்தினூடாக ஏற்கனவே பகிரப்பட்டுள்ளன. அவை மேலும் கவலையளிப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சதோஷம், கொண்டாட்டம் என்பன சிறிது நேரத்திலேயே வீணாப்போனதாக பிரதமர் தனது இரங்களில் தெரிவித்துள்ளார்.
பேரூந்து ஓட்டுனர் சிகிச்சைகளின் பின்னர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.