‘கிழக்கின் வளங்களை அபிவிருத்தி செய்ய முறையான திட்டங்கள் இல்லை’ – செந்தில் தொண்டமான்!

நான் இலங்கையன் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி சேவையாற்றவே விரும்புகின்றேன் எனவும் பிராந்திய, இன, மத பாகுபாடுகளுக்கு இடமில்லை எனவும் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவரவர் தங்களது மதத்தை மற்றைய மதத்துக்கு பாதிப்பில்லாத விதத்தில் கடைப்பிடிப்பதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக வந்தது அரசியல் செய்வதற்காக அல்ல எனவும் அதற்கான எந்தத் தேவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாகாணத்துக்கு தாம் நியமிக்கப்பட்தற்கான நோக்கத்தையும் அதன் பணிகளையும் வினைத்திறனாக முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்….

கிழக்கு மாகாணம் என்பது பல்வேறு வளங்களைக் கொண்ட பிராந்தியமாகும். விவசாயம், சுற்றுலா, மீன்பிடி, கனிய வளங்கள், நீர் வளங்கள் என பல பொக்கிஷங்கள் இங்கு உள்ளன. எனினும் கடந்த காலத்தில் ஒரு முறையான திட்டத்தின் ஊடாக இவை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படவில்லை என்றே தெரிகின்றது.

மலையகத்தில் தேயிலை என்ற ஒரு வளமே பிரதானமாக உள்ளது எனினும், அவற்றில் முதலீடு செய்வதற்காக சில பொருளாதாரத் திட்டங்கள் அங்குள்ளன. அந்தளவுக்கு கூட கிழக்கில் திட்டங்கள் இல்லை என்பது கவலைக்குரியது என தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கை அபிவிருத்தி செய்வதே என் தலைமையிலான அணியின் முக்கிய இலக்காக இருக்கும் . அதற்கு ஒத்துழைப்பு வழங்க பல வெளிநாடுகளும் முன்வந்துள்ள நிலையில் கிழக்கிலுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் குறைகளைக் கேட்பதற்கும் உடனடியாக தீர்வை முன்வைப்பதற்கும் முதலாவது ஆளாக நான் நிற்பேன் எனவும் அதற்காக மக்கள் குறைகேள் நிலையம் நிறுவப்பட்டு விசேட தொலைபேசி விளக்கமும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு சேவையாற்றுகின்ற போது சில சந்தர்ப்பங்களில் கடினமான தீர்மானங்களையும் எடுக்க நேரிடலாம் என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version