உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வீரக்கெடிய பிரதேச சபையின் மெதலமுதன வட்டாரத்தில் களமிறங்கிய வேட்பாளரான சிந்திக சம்பவத்தின் வாகனம் விஷமிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டமைக்கு பாரளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் அரசியல் வன்முறைகள் தலைத்தூக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விரிவான பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எதேச்சதிகார தூரநோக்கற்ற ஆட்சி முறைமையினால் நாட்டை வங்குரோத்தடையச் செய்த மொட்டு அரசாங்கம் மக்கள் போராட்டத்தின் விளைவாக ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளையும் கைவிட நேர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று அவர்கள் ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் வன்முறை மற்றும் மிருகத்தனத்தை அடிப்படையாக கொண்ட மோசமானதொரு நிலைப்பாடு கொண்ட புதிய சுற்று எழுகையையே தொடங்கியுள்ளதாகவும், இந்த மோசனமான சூழ்நிலைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தயங்காது எனவும் அவர் கூறியுள்ளார்.