நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வது தொடர்பில் ஆய்வு!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவையும் கனேடிய அரசியல், சமூகச் செயற்பாட்டாளரான ரோய் சமாதானம், ஆகிய மூவரும் கடந்த வியாழக்கிழமை (15.06) விடேச கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, இலங்கையில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையில் நிரந்தரமான சமாதான நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதோடு, தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக கூடிய கரிசனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சமூக செயற்பாட்டாளரான ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டென்மார்க்கில் வாழ்கின்ற 2 ஆயிரம் பேர் வரையான புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு தடையாகவுள்ள டென்மார்க் அரசாங்கத்தால் வழங்கப்படும் அகதிகளுக்கான பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டு (அலையன்ஸ் கடவுச்சீட்டு) ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகும் அவர் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கிலுள்ள எமது பிரஜைகள் தமது தாய்நாட்டைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகை தருவதற்கு தயாராக இருப்பதுடன், முதலீடுகளைச் செய்வதற்கும் முன்வருவதாகவும், அவற்றினூடாக இலங்கைக்கு அந்நிய செலவாணி வருமானம் கிடைப்பதற்கு சாத்தியமான நிலைமைகள் உள்ளதாகவும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆகவே, அவர்கள் இலங்கைக்கு பிரவேசிப்பதற்குரிய தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அக்கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version