சிம்பாவேயில் நேற்று(18.06) ஆரம்பித்த உலக கிண்ண தெரிவு போட்டி தொடரின் முதற் போட்டியில் சிம்பாவே அணி நேபாளம் அணியை 08 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா அணியை 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
சிம்பாவே அணிக்கெதிராக நேபாளம் அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் குஷால் பூர்ட்டல் 99 ஓட்டங்களையும், ஆஷிப் செய்க் 66 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் ஆரம்ப விக்கெட்டுக்காக 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். ரிச்சர்ட் நகர்வா 04 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 44.1 ஓவர்களில் 02 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றுக் கொண்டது. இதில் கிரைக் எவைன் 121 ஓட்டங்களையும், சீன் வில்லியம்ஸ் 102 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் முறியடிக்கப்படாத 164 ஓட்டங்களை மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 297 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஜோன்ஸ்டன் சார்ள்ஸ், ரொஸ்டன் சேஸ், ஜோன்சன் ஹோல்டர் 56 ஓட்டங்களையும், சாய் ஹோப் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷவ்ரப் நெர்வாக்கர், கைல் பிலிப், ஸ்டீபன் ட்ரெய்லர் ஆகியோர் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அமெரிக்கா அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் கஜானானந் சிங் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரின் முதல் சதமாகும். பந்துவீச்சில் கைல் மயேர்ஸ், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இன்று இலங்கை அணி ஐக்கிய அரபு இராட்சியத்துடன் மோதவுள்ளது. இரண்டாவது போட்டியில் அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.