இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான நேர எல்லை திருத்தப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக இந்த திருத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான இதுவரை அமுலில் இருந்த நேர எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த புதிய திருத்தத்திற்கு அமைய வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.00 வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12 .45 வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இசை நிகழ்ச்சி இடம்பெறும் இடத்திற்கும் அதனை சூழவுள்ள மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கும் இடையில் சரியான அளவு இடைவெளியை பேண வேண்டியது கட்டாயம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.