உலகக்கிண்ண தொடருக்கான தெரிவுகாண் போட்டிகள் சிம்பாவேயில் நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம்(21.06) நடைபெற்ற போட்டிகளில் ஸ்கொட்லாந்து அணி பர பரப்பான வெற்றி ஒன்றினை பெற்றுக் கொண்டது. இன்னுமொரு போட்டியில் ஓமான் அணி தனது இரண்டாவது வெற்றியினை பெற்றுக் கொண்டது.
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி விறு விறுப்பாக நடைபெற்றது. இறுதி பந்தில் ஒரு விக்கெட்டினால் ஸ்கொட்லாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் கேர்ட்டிஸ் கம்பர் 120 ஓட்டங்களையும், ஜோர்ஜ் டொக்ரெல் 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இந்த ஜோடி 136 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டது. ப்ரண்டன் மக்லம் பந்துவீச்சில் 05 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் மிக்கேல் லீஸ்க் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களையும், கிறிஸ்டோபர் மக்ப்ரைட் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மார்க் அடர் 03 விக்கெட்களையும், ஜோஷ் லிட்டில், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரகம் 50 ஓவர்களில் 08 விக்கெட்ளை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் அயான் அஃப்சல் கான் 58 ஓட்டங்களையும், ரிதியா அரவிந்த் 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜே ஒடேற்றா 03 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் அணி 46 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் அஃகுய்ப் இலியாஸ் 53 ஓட்டங்களையும், ஷொயிப் கான் 52 ஓட்டங்களையும், மொஹமட் நதீம் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜுனைட் சித்திக், ரொஹான் முஸ்தபா ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
குழு நிலையில் முதல் 03 இடங்களை பெறும் அணிகள் இரண்டாம் சுற்றான சுப்பர் சிக்ஸ் தொடருக்கு தகுதி பெறும்.