உலக கிண்ண தெரிவு போட்டி;மேற்கிந்திய தீவுகளை வென்றது சிம்பாவே.

சிம்பாவேயில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தெரிவுகாண் தொடரில் நெதர்லாந்து மற்றும் சிம்பாவே அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற்று தமது மூன்றாவது வெற்றியினை பெற்று குழு A இல் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றான சுப்பர் 6 வாய்ப்பை பெற்றுள்ளது.

மற்றுமொரு போட்டியில் நெதர்லாந்து அணி நேபாளம் அணியை வெற்றி பெற்று சுப்பர் 6 வாய்ப்பை பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் நேபாளம் அணிகள் உலக கிண்ண தெரிவுகாண் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. தோல்வியடைந்த போதும் மேற்கிந்திய தீவுகள் அடுத்து சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள், சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஷிகாண்டர் ரஷா 68 ஓட்டங்களையும், ரயான் பேர்ல் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் கீமோ போல் 3 விக்கெட்களையும், அல்ஷாரி ஜோசப், அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் கைல் மேயர்ஸ் 56 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரென்றாய் சட்டாரா 03 விக்கெட்களையும், ப்ளேஸிங் முஷரபாணி, ரிச்சட் ங்வாரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

நேபாளம், நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி 44.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோஹிட் பௌடீல் 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் லோகன் வன் வீக் 4 விக்கெட்களையும், பஸ் டி லீட், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள். நெதர்லாந்து அணி 27.1 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் மக்ஸ் ஓ டௌட் 90 ஓட்டங்களையும், பஸ் டி லீட் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர். சந்தீப் லமிச்சேன் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

நாளை(25.06) இலங்கை அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி முக்கிய போட்டியாக நடைபெறவுள்ளது. இலங்கை அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று உறுதியாகும். அயர்லாந்து அணி தோல்வியடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும். மற்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து, ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version