‘கஞ்சாவை ஏற்றுமதி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்’ – போலி கூற்றுக்கு எதிர்ப்பு!

கஞ்சாவை ஏற்றுமதி செய்வதன் மூலம் பாரிய பொருளாதார நன்மைகளைப் பெற முடியும் எனும் கூற்றுகளில் உண்மையில்லை என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முதலீட்டுச் சபையின் செயற்திட்டமாக இதற்கு அனுமதி வழங்கப்படுமென விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்ததாகவும் குறித்த மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அந்த நிறுவனம் இந்த கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

கஞ்சாவை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் உள்ள தரப்பினர் தற்போது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் தமது இலக்குகளை அடைய முயற்சிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கஞ்சாவின் தற்போதைய நேர்மறையான சித்தாந்தங்கள் தொடர்ந்து பிரபலமடைந்து வருவதாகவும் குறித்த மையம் தெரிவித்துள்ளது.

கஞ்சா போன்ற தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் பிரபலமடையும் போது, ​​ஏனைய போதைப்பொருட்களின் பாவனையும் அதிகரிப்பதாகவும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

புகைத்தல் மற்றும் மது பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 100 பேர் உயிரிழப்பதாகவும் புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் இலங்கையர்களிடமிருந்து சுமார் 100 கோடி ரூபா வருமானம் ஈட்டுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version