33 வருட சாதனையை சமன் செய்தார் வனிந்து

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று (25.05) புலவாயோவில் நடைபெற்ற போட்டியில்
இலங்கை அணி 133 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சுப்பர் சிக்ஸ்சுக்கு தெரிவாகியுள்ளது. இலங்கையணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகிறது. ஸ்கொட்லாந்து அணியும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகிறது. இலங்கை அடுத்த போட்டியில் ஸ்கொட்லாந்துடன் விளையாடவிருக்கிறது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது. இதில் திமுத் கருணாரட்ன 103(103) ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 82(86) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 42(35) ஓட்டங்களையும், சரித் அசலங்க 38(30) ஓட்டங்களையும் பெற்றனர். இது திமுத் கருணாரட்னவின் முதற் சதமாகும். அதேவேளை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்துகொண்டார். அத்தோடு தொடர்ச்சியான ஐந்தாவது 50 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார். இலங்கை அணி சார்பாக சனத் ஜெயசூரிய, குமார் சங்ககாரா, திலகரட்ண டில்ஷான் ஆகியோர் இவ்வாறன பெறுதியை பெற்றுள்ளனர். திமுத் கருணாரட்ன மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் 168 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பந்துவீச்சில் மார்க் அடைர் 4 விக்கெட்களையும், பர்ரி மக்கார்த்தி 3 விக்கெட்களையும், கரெத் டெலனி 2 விக்கெட்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 31 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 192 ஓட்டங்களை பெற்றது. இதில் கேர்ட்டிஸ் கம்பெர் 39(31) ஓட்டங்களையும், ஹரி டெக்டர் 33(35) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வனிது ஹசரங்க 5 விக்கெட்களையும், மஹேஷ் தீக்ஷண 2 விக்கெட்களையும், தசுன் ஷானக, லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். வனிது ஹசரங்க தொடர்ச்சியான ஐந்து விக்கெட்களை கைப்பற்றிய வொக்கார் யுனிசின் சாதனையை 33 வருடங்களின் பின்னர் சமன் செய்துள்ளார்.

சுப்பர் சிக்சிற்கான 6 அணிகளும் தெரிவாகியுள்ள நிலையில் இனி நடைபெறவுள்ள போட்டிகளில் அணிகளின் இடங்கள் தீர்மானிக்கப்படும். அதன் மூலமாகவே அணிகளுக்கான போட்டித் தினங்கள் உறுதி செய்யப்படும்.

ஸ்கொட்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 76 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. ஓமான் அணி தோல்வியடைந்த போதிலும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 320 ஓட்டங்களை பெற்றது. இதில் பிரண்டன் மக்களெம் 136(121) ஓட்டங்களையும், ரிச்சி பெரிங்க்டொன் 60(62) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் பிலால் கான் 5 விக்கெட்களையும், பயாஸ் பட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. நசீம் குஷி 69(53) ஓட்டங்களையும், ஷோயிப் கான் 36(42) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் 5 விக்கெட்களை பெற்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version