அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்து சலுகை வழங்குவதில் பெரும் சிக்கல் நிலவுவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Verite Research நிறுவகம் சுட்டிக் காட்டியது போல் மின் நுகர்வு அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டால் இது அறிவியல் பூர்வமாக சரியான தெரிவாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வராந்த செயற்குழுக் கூட்டம் இன்று (26.05) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “Lirne asia நிறுவகம் 13 மாவட்டங்களில் 10,000 குடும்பங்களை மையமாக வைத்து நடத்திய கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் வறியோர் மக்கள் தொகை 17 வீதத்தால் அதிகரித்துள்ளது. ,30 இலட்சத்தில் இருந்த வறியோர் எண்ணிக்கை 70 இலட்சமாக உயர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த தெரிவு முறையால்,70 இலட்சம் வறியோர் தொகையில் ஒரு பகுதியினருக்கு இந்த நலன்புரி நிவாரணங்கள் கிடைக்காது போகும் நிலை எழுந்துள்ளது. அஸ்வெசும வேலைத்திட்டம் என்பது கண்ணை மூடி நலன்புரி நன்மைகளை நீக்கும் வேலைத்திட்டமாக காணப்படுகிறது.
இத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்த மின் நுகர்வின் அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தால் 80 சதவீதத்திற்கும் மேல் இது வெற்றி பெற்றிருக்கும். ஆனால் தற்போது அஸ்வெசும திட்டம் சிறப்பாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் விதத்தில் அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது.
இது சீர்செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். குடும்ப அலகொன்றின் வருமானத்தையும் வெலவீனங்களையும் மீளாய்வு செய்வது இன்றியமையாதது. ஆகவே வறிய மக்கள் யார் என்பதனை சரியாக கணக்கெடுக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.