யாழ் முச்சக்கரவண்டிகளுக்கும் மீட்டர் கருவி!

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கருவி பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் இந்த கட்டண அளவீட்டுக்கருவி பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16ம் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் மூன்று நாட்களிலும் கட்டண அளவீட்டுக்கருவி பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலிசாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.
இந்த செயற்பாட்டின் பின்னர் மட்டுமே முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த கட்டண அறவீட்டு முறையை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version