கடன் மறுசீரமைப்பு மலையக தொழிலாளர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் – சுமந்திரன்!

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு மீதான விவாதம் இன்று (01.07) பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது என விமர்சித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியுள்ளது எனக் கூறிய அவர், தேசிய கடன் ஒருபோதும் மறுசீரமைக்கப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் கடந்த காலங்களில் கூறியிருந்தார் எனவும் சுட்டிக்காட்டினார்.

தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் என சர்வதேசத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு மக்களை தவறாக வழிநடத்தியமை முற்றிலும் தவறானது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் EPF, ETF இல் ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் குரல்கொடுக்க முடியாத நிலையில் தான் மக்கள் உள்ளார்கள் எனவும் கூறிய அவர், தேசிய கடன் மறுசீரமைப்பால் உழைக்கும் மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும் மலையக தோட்ட தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை தமது இறுதி சேமிப்பாக கருதுகிறார்கள். இவர்களின் சேமிப்புக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் இதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இடமளிப்பாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version