அரசியலுக்குள் ஒருவர் வந்துவிட்டால் அவர் தலையை பாவிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா சதுரங்கம் விளையாடுவது போன்று அரசியலை செய்ய வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை விரைவில் அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா நீக்குவார் என தான் எதிர்பார்ப்பதாக ஹிருணிகா நேற்று(07.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதியோடு சமரசம் செய்பவர்கள் தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துக்கு தெரிவித்துள்ளேன். அவர்களுக்கு எதிராக தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்குமென நான் எதிர்பார்க்கிறேன். என்ன நடைபெறுகிறது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்” என ஹிருணிகா கருத்து கூறியுள்ளார்.
தான் ஒரு போதும் ஐக்கிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேற மாட்டேன் எனவும், கட்சியினை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன் எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.