வவுனியா வர்த்தக சங்க கட்டிட திறப்பு நிகழ்வை புறக்கணித்த ஆளுனர்

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்புவிழா பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (09.07) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதி குறித்த நிகழ்வுக்கு வருகை தந்தமையினால் வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதி, கல்வித்திணைக்களம் அமைந்துள்ள பகுதி உட்பட சிந்தாமணி பிள்ளையார் கோவில் பகுதியெங்கும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் தனியாரின் வீடுகளுக்கு மேற்பகுதியிலும் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் அரச காணியொன்றில் உரிய அனுமதிகளை பெற்று இரண்டு மாடிகளை கொண்டு பல இலட்சம் ரூபா பெறுமதியில் வர்த்தகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் அமைக்கப்பட்டது.

குறித்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினரிடம் வர்த்தகர் சங்கம் விடுத்த கோரிக்கையினை பிரகாரம் கட்டுமான பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வட மாகாண ஆளுனர் மற்றும் இராணுவத்தினரின் வன்னி கட்டளை தளபதியின் பிரசன்னத்துடன் கட்டிடம் திறக்கப்படவிருந்த போதிலும் இறுதி நேரத்தில் வட மாகாண ஆளுனர் தன்னால் நிகழ்வில் பங்கேற்க முடியாதுள்ளமையை தெரிவித்திருந்தார். இந் நிலையில் இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியினூடாக குறித்த கட்டிடம் திறக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் ஆளுனருக்கு அடுத்து இராணுவத்தின் வன்னி கட்டளை தளபதியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் வட மாகாண ஆளுனரின் பெயர் இரண்டாவதாகவும் இராணுவ தளபதியின் பெயர் முதலாவதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆளுனர் நிகழ்வை நிராகரித்திருந்தாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

இந்த நிகழ்வுக்கு வடக்கு ஆளுனர் மட்டுமன்றி வவுனியா அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், முன்னாள் நகரசபை தலைவர் உள்ளிட்ட வவுனியாவைச் சேர்ந்த பலரும் அழைக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அத்தோடு வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிகள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் தமிழர் சார்ந்த பிரச்சனைகளுக்கு வடக்கு கிழக்கு தழுவிய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் மெளனம் காக்கும் வவுனியா வர்த்தகர் சங்கம் இராணுவத்தினருக்கு அதி முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக வவுனியாவில் சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version