அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (10.07) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நலன்புரி திட்டம் தொடர்பில் 9 இலட்சம் முறையீடுகளும் 12,000 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த சில தினங்களாக இந்த நலன்புரி திட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அதிக தேவையுடைய சில தரப்பினரின் பெயர்கள் இடம்பெறவில்லை என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறித்த குற்றச்சாட்டுகளை கருத்திற்கொண்டு மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது குறித்த திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும், உண்மையில் அதிக தேவையுடையோருக்கு இந்த நலன்புரி திட்டத்தின் நலன்கள் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.