ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் குற்றப்பத்திரிகையை வாசிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (11.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகள் மூன்று பிரதிவாதிகளை ஆஜர்படுத்தவில்லை. பிரதிவாதிகள் மூவரும் மற்றுமொரு விசாரணைக்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்நிலையில், குற்றப்பத்திரிகையை வாசிப்பது ஆகஸ்ட் 7, 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளுக்கு ஒத்திவைக்கப்படும் என மூவரடங்கிய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், வழக்குப் பொருட்கள் என பெயரிடப்பட்டுள்ள இரண்டு T-56 துப்பாக்கிகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு தேவை எனவும், சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடவடிக்கை எடுக்குமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
தேவைப்படும் போது இரண்டு துப்பாக்கிகளையும் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.