பயணிகள் உரிமம் இல்லாமல் முறைகேடான விதத்திலும் சட்டவிரோதமாகவும் பயன்களில் ஈடுபடும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இயங்கும் பஸ்களை கையாள்வதற்கு பொலிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து வேலைத்திட்டமொன்று விரைவில் தயாரிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி அதிகளவான பேருந்துகள் இயங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11.07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மன்னம்பிட்டிய பஸ் விபத்துக்கு சாரதியின் கவனயீனமே முழு காரணம் என தெரியவந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், பஸ் விபத்துக்குள்ளான இடம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய தகவல்களின்படி விபத்துக்குள்ளான பேரூந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான அனுமதிப்பத்திரம் பெறாமல் இயக்கப்பட்டுள்ளதாகவும், 2018ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை பேருந்திற்கு அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.