குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய்!

குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நான்கு தட்டம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் குழந்தை நல ஆலோசகர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

நேற்று (11.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த திங்கட்கிழமை (10.07) நிலவரப்படி 12 குழந்தைகளுக்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாகவும், நான்கு பேருக்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“அதிக காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் கண்களில் நீர் வடிதல் ஆகியவை அம்மை நோயின் அறிகுறிகளாக இருப்பதுடன், இது தட்டம்மை சொறி எனப்படும் உடலில் ஒரு வகை சொறியும் அடங்கும், என அவர் விளக்கமளித்துள்ளார்.

அம்மை நோய்க்கான MMR தடுப்பூசியைப் பெறத் தவறிய குழந்தைகளும் இந்நோயின் அறிகுறிகளுடன் இருப்பதாக வைத்தியர் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

MMR தடுப்பூசி குழந்தையின் 09வது மாதத்திலும் மூன்று வயதின் போதும், இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தடுப்பூசிகளை பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அம்மை நோயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக எச்சரித்த வைத்தியர் தீபால் பெரேரா, இது பிள்ளைகள் மத்தியில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற உடல்நலக் குறைபாடுகளைத் தடுக்க, தங்கள் குழந்தைகளுக்குத் தட்டம்மைக்கான MMR தடுப்பூசியை பெற்றோர்கள் தவறாமல் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version