கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07.12) முன்னெடுக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்களை ஒதுக்குதல், படித்த மகளிர் திட்ட காணி விவகாரம், கரும்புத் தோட்ட காணி, விவசாயம், நீர்ப்பாசன நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
முன்னதாக கிளிநொச்சி பகுதியில் பயிர் செய்கை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமல் கடலில் கலக்கின்ற நீரினை உரிய முறையில் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்த நிலையில், களவிஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார். இந்த விடயம் குறித்தும் நேற்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந. லிங்கநாதன், பிரதேச செயலாளர்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அரச திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர், விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.