தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவின் வடமாநிலங்களில் கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த தண்ணீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது, இதனால் யமுனை ஆறு பெருக்கெடுத்து பல பகுதிகளிலும் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன், இதுவரையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர் மழை சற்று குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (15.07) மீண்டும் கனமழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.