தேர்தல் விவகாரத்தில் தெரிவுக்குழு அமைப்பது குறித்து சஜித் விமர்சனம்!

தேர்தல் வேலைத்திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர் என்பது குறித்து ஆராய ‘தெரிவுக் குழுவொன்றை’ நியமிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அலுவல்களுக்கான குழுக் கூட்டம் இன்று(17.07) நடைபெற்றது. இதன்போதே குறித்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சஜித் பிரேமதாச,காணொலி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழு மீதும், நீதிமன்றத்தின் முன்னுள்ள விசாரணைகளிலும் செல்வாக்குச் செலுத்தி ஜனநாயக நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்காக நீதித்துறை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் செல்வாக்கு செலுத்துகிறது.

தற்போதைய தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல், வரம்புகளுக்குள் செயல்பட வேண்டும் என்பதையும் இல்லாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன் ஆஜராக வேண்டும் என்ற தெளிவான முறையற்ற அச்சுறுத்தல் விடுப்பதற்குமே இந்த தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

அதேபோன்று மேலான நீதிமன்ற நீதிபதிகள் அரசின் கருத்துக்களுக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால் நீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தவில்லை என்றால் மேலான நீதிபதிகளை தெரிவுக் குழு முன் கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கவும் முடியும் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது.

வங்குரோத்தடைந்த நாட்டில் முறைமை மாற்றம் ஏற்படும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலாவதியான, மக்கள் வெறுத்த பழைய முறைமையையே இந்த தெரிவுக் குழுவின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

உண்மையில் இந்த அரசாங்கம் அதன் நடவடிக்கைகளின் மூலம் மக்களின் இறையாண்மையையும், சர்வஜன வாக்குரிமையையும் அழித்து வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் என்ற தொனிப்பொருளில் அரசாங்கம் நீதிமன்றத்திற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அழுத்தம் கொடுக்கப் போகிறது.

பாராளுமன்றத்திலுள்ள மொட்டு உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் அல்லாது 220 இலட்சம் மக்களினது சிறப்புரிமைகளும் உரிமைகளுமே மீறப்பட்டுள்ளது. இதன் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க இடமளிக்க மாட்டோம்.

சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் ஆணைக்குழு மீது செல்வாக்கு செலுத்த இடமளிக்க மாட்டோம். தனியாகவன்றி எதிர்க்கட்சியின் சகல தரப்புகளையும் ஒன்றாய் இணைத்துக் கொண்டு 220 இலட்சம் மக்களின் நலனுக்காக நீதித்துறையின் சுதந்திரத்தையும் தேர்தல் ஆணையக்குழுவின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் செயற்படும்.

ஜனநாயகத்தை அழிக்க இந்த அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகள் சகலதையும் முறியடிக்க நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version