காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் விசேட கூட்டம் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் ஹாபில் நசீர் அகமத் தலைமையில் பிரதேச செயலகமாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.உதய ஸ்ரீதரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்நோக்கும் சவால்களை முறியடிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது கடலுக்குள் வலைகளை அறுத்து மீன்களை திருடும் கும்பல்கள் பற்றியும், எடுத்துக்கூறப்பட்டுள்ளதுடன், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வினை மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் அதிகாரிகளிடம் வினவிய போது இந்த மீன் பிடி களவு நடவடிக்கை ஆள் கடல் பகுதியில் நீண்ட காலமாக நடைபெற்று வருவதாகவும் கட்டுப்படுத்துவதற்கு முடிவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அமைச்சர் நசீர் அஹமத் கடல் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்
இது தவிர காத்தான்குடி கல்வி கோட்ட பிரிவில் 13 பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கு பதில் கடமை அதிபர்கள் கடமையாற்றி வருகையில் அதிபர் சேவை முதலாம் தரத்தில் உள்ள ஒருவரை வெளி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்தது பற்றி கல்வி அதிகாரிகளிடம் அமைச்சர் நசீர் வினவினார்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள் குறித்த தகுதி உள்ள அதிகாரியை முறைகேடாக மாற்றம் செய்திருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், காத்தான்குடி பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை முடக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அதிகாரிகள் இடமளிக்கக்கூடாது என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
ஏனைய கல்வி கலாசார அபிவிருத்தி,சமூக நலன்புரி மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளும் இங்கு ஆராயப்பட்டன.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட செயலாளர் சபீல் நளீமீ கருத்து வெளியிடுகையில் ”மாவட்டத்தில் எங்கு மில்லாத வாறு காத்தான குடி அல்ஹிரா பாடசாலையில் வகுப்புக்கள் ஓலை கொட்டில்களில் மாணவர்கள் கல்வி கற்பதாகவும் இதில் கவனம் செலுத்தாத கல்வித் திணைக்களம் தரமுள்ள அதிபர்களை வெளிமாவட்டத்திற்கு மாற்றம் செய்வதில் கூடிய கவனம் செலுத்துவது வியப்புக்குரியது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் அளித்த அபிவிருத்தி குழுவின் தலைவர் நசீர் அஹமத் முழு அதிகாரங்களுடன் தான் முதலமைச்சராக செயல் பட்ட வேளை ஒரு உத்தியோகத்தரையேனும் முறைகேடாக இடமாற்றம் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.