சர்ச்சைகளுடன் நடைபெற்ற தென் எருவில் பற்று பிரதேச சபை அமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 44 வது சபை அமர்வு நேற்று (21) களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் சபையின் உப பவிசாளர் திருமதி.கனகராச ரஞ்சினி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு பாதீடு சமர்ப்பிக்கப்பட்டதுடன், சபை உறுப்பினர்களின் மருத்துவ விடுமுறை, பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவது தொடர்பான விடையம், பெரியகல்லாறு மைதான கொங்றீட் வீதி அமைக்கப்பட்ட விடையம், பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும், 27 ஊழியர்களின் கால நீடிப்பு, 2021 செப்டம்பர் மாதத்திற்கான வரவு செலவு அறிக்கை அனுமதித்தலும், உறுதிச் சீட்டுக் கொடுப்பனவுக்கான அனுமதி போன்ற பல விடையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதற்கு அக்கிராமத்தவர்கள் சிலரது வேண்டு கோளிற்கிணங்க இப்பிரதேச சபை ஏற்கனவே தற்காலிகமாக அதில் கடினப்பந்து விளையாடுவதற்குத் தடை வித்தித்துள்ளது.

இந்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த 8 விளையாட்டுக் கழகங்கள் தாம் குறித்த விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து அந்த மைதானத்தில் கடினப்பந்து விளையாட வேண்டும் அதற்குரிய அனுமதியைத் தந்துதவுமாறு கோரி அனுப்பின கடிதங்கள் இதன்போது உபதவிசாளரினால் வாசிக்கப்பட்டது.

இந்த விடயம் சபை உறுப்பினர்களிடையே மிகுந்த வாத பிரதிவாதங்களும், தர்க்கங்களும், இடம்பெற்றதைத் தொடர்ந்து பிரதேச சபை உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று குறித்த மைதானத்தில் விளையாடுவதங்குத் தடை ஏற்படுத்துமாறு கோரிய மக்களிடம் நேரில் சென்று கருத்துக்களைப் பெறுவது எனவும், பின்னர் மீண்டும் குறித்த விளையாட்டை விளையாட வேண்டும் என கோரும் 8 கழங்களையும் அழைத்து பேசுவது எனவும், அதன் பின்னர் குறித்த விளையாட்டுக்கு பிரதேச சபையால் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவது எனவும், இது வருகின்ற ஒரு வாரத்தினுள் இடம்பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர்களிடையே மாறி மாறி தர்க்கம் இடம்பெற்றுக் கொண்டிருந்த இவ்வேளையில் தனக்கு பேசுவதற்குச் சந்தர்ப்பம் தரவில்லை என துறைநீலைவணை வட்டார பிரதேச சபை உறுப்பினர் கணபதிப்பிள்ளை சரவணமுத்து சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை இடைநடுவே சபையை விட்டு வெளியேறினார்.

சர்ச்சைகளுடன் நடைபெற்ற தென் எருவில் பற்று பிரதேச சபை அமர்வு.
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version