நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கடந்த (19.07) ஆம் திகதி பாராளுமன்றத்தில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
பல வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு பெருமளவிலான அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதற்குத் தமது உழைப்பை வழங்கியுள்ளனர்.எனினும்,இன்றும் இத்தோட்ட மக்கள் மிகவும் குறைந்த வசதிகளிலேயே தமது வாழ்வை நடத்தி வருகின்றனர். இந்தத் தோட்டச் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும். தோட்ட மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன் பிரகாரம்,இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி,பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
01.மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுத் தொகையை எந்த தோட்டக் கம்பனிகள் வழங்குவதில்லை என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதா? அவ்வாறெனில் அவை யாது? அரசாங்கம் முன்வைத்த கொடுப்பனவை வழங்காமைக்கு தோட்ட நிறுவனங்கள் கூறும் காரணங்கள் என்ன? இது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
02.தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக அரச, தனியார் மற்றும் இணைந்த தோட்டக் கம்பனிகள் EPF, ETF ஆகியவற்றிற்குச் செலுத்த வேண்டிய மொத்தத் நிலுவைத் தொகை எவ்வளவு? இவ்வாறு நிலுவையில் உள்ள நிதியை செலுத்த வேண்டிய நிறுவனங்கள் எவை? அந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளது என்பதை தனித்தனியாக வழங்க முடியுமா?முடியாவிட்டால் ஏன் முடியாது?
03.நுவரெலியா,பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு அறையை (Smart Class Room) நிறுவும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்கு இந்திய உதவி எவ்வளவு தொகை கிடைத்தது? இம்மாவட்டங்களில் எந்தெந்த பாடசாலைகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளதா?அவ்வாறெனில் அவை யாவை? அதன் தற்போதைய முன்னேற்றம் யாது?
இந்த ஆண்டு தோட்ட மக்களுக்காக 3,225 வீடுகள் இந்திய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இந்திய உதவி எவ்வளவு தொகை கிடைத்தது? இதுவரை எத்தனை வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன? அந்த வீடுகள் தற்போது தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? அவ்வாறு வழங்கப்படவில்லை என்றால்,பெருந்தேட்ட மக்களுக்கு எப்போது இந்த வீடுகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது? இதற்கு மேலதிகமாக,தோட்ட மக்களின் வீட்டுக் கனவை நனவாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இந்திய அரசின் ஆதரவுடன் மலையகத் தமிழர்களுக்கான அரச பல்கலைக்கழகம், தாதியர் பயிற்சி நிறுவனம், விஞ்ஞானம், தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் கணிதம் (STEM Subjects) ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி முன்மொழிந்திருந்தது. ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் போது இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுமா?
பெருந்தோட்டங்கள் தொடர்பில் தற்போது எந்தெந்த காணிகள் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதா? அடையாளம் கண்டுள்ளது என்றால்,ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு இடம் உள்ளது? இந்த இடங்களில் எவ்வளவு நிலம் தோட்ட மக்களுக்கு மீள் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளது? அவை வெற்றிகரமாக பயிரிடப்படுவதை அரசாங்கம் கன்காணித்துள்ளதா? தொடர்ந்து விவசாயம் செய்யாத தோட்டங்களை பயிர்ச்செய்கைகளுக்காக பெருந்தோட்ட மக்களுக்கு கொடுத்து வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர், நுவரெலியா,கண்டி,பதுளை,இரத்தினபுரி, கேகாலை,களுத்துறை,அவிசாவளை,காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தோட்டப் பகுதிகளை அண்டி எத்தனை மதுபானக் கடைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு அனுமதி வழங்குவதில் உரிய அளவுகோல்கள் உரியவாறு பின்பற்றப்பட்டுள்ளதா?அவ்வாறு பின்பற்றப்படவில்லை என்றால், ஏன் பின்பற்றப்படவில்லை? என பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.